கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்


கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 15 March 2020 5:16 AM IST (Updated: 15 March 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப் படுத்தி உள்ளது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவை அச்சுறுத்த தொடங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து புதுவையில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

அதன்படி வீடுகள் தோறும் விழிப்புணர்வு நோட்டீசுகளை சுகாதாரத்துறை வழங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

கட்டுப்பாடுகள்

அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருநள்ளாறு சனீஸ்வரன்கோவில், மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதுவை வரும் சுற்றுலா பயணிகள் எல்லைப்பகுதிகளில் சோதிக்கப்படுகின்றனர். விமானநிலையத்தில் மருத்துவ குழு முகாமிட்டு சோதனை நடத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் யாரேனும் இருந்தால் அது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழாக்கள் நடத்தக்கூடாது

மாகி பிராந்தியத்தில் வருகிற 31-ந்தேதி வரை 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் பள்ளிக்கூடங்களில் காலை நேர அணிவகுப்பினை நடத்த வேண்டாம் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கவேண்டும். ஆண்டுவிழா, விளையாட்டு விழா, கலாசார விழாக்களை மறுஉத்தரவு வரும்வரை கண்டிப்பாக நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதி மாணவர்கள்

மாணவர்கள் கை கழுவுவதற்கு தேவையான சோப்பு வைக்கவேண்டும், தண்ணீர் குடிக்க சென்றாலும் மாணவர்கள் கைகளை கழுவவேண்டும், சளி, இருமல், தொண்டை பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு விடுமுறை அளிக்கவேண்டும், அத்தகைய பிரச்சினை உள்ளவர்களிடம் தள்ளி நின்று பேச மாணவர்களை அறிவுறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரிகளுக்கும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரசு மற்றும் தனியார் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்றவை இருந்தால் அவற்றை சாதாரணமாக எண்ணி இருந்து விடக் கூடாது. உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு கைகழுவ தேவையான தண்ணீர், சோப்பு போன்றவற்றை வைத்திருக்கவேண்டும், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கவேண்டும், மறுஉத்தரவு வரும்வரை கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமுதாய நலக்கூடங்கள்

புதுவையை பொறுத்தவரை இதுவரை 23 பேருக்கு சந்தேகத்தின்பேரில் கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருந்தால் அவர்களை சார்ந்து இருப்போரை தனிமைப்படுத்தி வைக்க நகராட்சிகள் சார்பில் சமுதாய நலக்கூடங்களை தயார் படுத்தி வைக்க உள்ளாட்சித்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி பொதுவான இடங்களில் போதிய தண்ணீர் வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story