கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: மணப்பாறை மாட்டுச்சந்தை, பஸ் நிலையம் வெறிச்சோடின


கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: மணப்பாறை மாட்டுச்சந்தை, பஸ் நிலையம் வெறிச்சோடின
x
தினத்தந்தி 18 March 2020 11:30 PM GMT (Updated: 18 March 2020 4:44 PM GMT)

கொரோனா வைரஸ் பீதி எதிரொலியால் மணப்பாறை மாட்டுச்சந்தை, பஸ் நிலையம் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

மணப்பாறை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள், பூங்காக்கள் ஆகியவை வருகிற 31-ந் தேதி வரை மூடப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள புகழ்பெற்ற மாட்டுச் சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும். இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து தங்களுக்கு தேவையான மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

வெறிச்சோடியது

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த வாரம் மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா?, நடைபெறாதா என்ற சந்தேகம் எழுந்ததால் குறைந்த அளவு வியாபாரிகளே வந்திருந்தனர். விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகளின் எண்ணிக்கையும் சொற்பமாகவே இருந்தது.

வழக்கமாக இந்த மாட்டுச் சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை நடைபெறும். ஆனால், நேற்று மிக குறைந்த அளவுக்கே வியாபாரம் நடைபெற்றது. இதனால், பலகோடி ரூபாய்க்கு வியாபாரம் முடங்கியது.

இந்நிலையில் வருகிற 31-ந் தேதி வரை மாட்டுச் சந்தையை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பஸ் நிலையம்

கொரோனா வைரஸ் குறித்த பீதியால் பெரும்பாலான மக்கள் போக்குவரத்தை தவிர்த்துள்ளனர். இதன் காரணமாக மணப்பாறை பஸ் நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது.

முக்கிய சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. இதனால், வியாபாரம் பெருமளவில் முடங்கிப் போய் உள்ளது.

இந்நிலையில் மணப்பாறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று காலை அரசு பஸ்களுக்கு நகராட்சி பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் பஸ் நிலையத்தில், அனைத்து பஸ்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவில் களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Next Story