கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது
x
தினத்தந்தி 19 March 2020 5:30 AM IST (Updated: 18 March 2020 11:22 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது. வருகிற 31-ந் தேதி வரை பக்தர்களுக்கு கோவிலில் அனுமதி இல்லை.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 5-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கு நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் தஞ்சையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

நினைவுச்சின்னங்கள் மூட உத்தரவு

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் மூடுமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி வரலாற்று நினைவு சின்னமாக விளங்கும் தஞ்சை பெரியகோவிலை மூடுமாறு தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வந்தது. இதையடுத்து தஞ்சை பெரியகோவில் நேற்று காலை 11 மணி முதல் மூடப்பட்டது.

பெரியகோவில் பூட்டப்பட்டது

நேற்று காலை நடைதிறந்தது முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 11 மணிக்குப்பிறகு பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

வருகிற 31-ந்தேதி வரை கோவில் மூடப்பட்டு இருக்கும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு பதாகையும் மராட்டா நுழைவுவாயிலில் உள்ள பூட்டப்பட்ட கேட்டில் வைக்கப்பட்டது. அதே நேரத்தில் கோவிலில் வழக்கம் போல பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

கோவில் பூட்டப்பட்டதையடுத்து நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி ்சென்றனர்.

Next Story