கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பஸ், ரெயில் நிலையங்கள் வெறிச்சோடின கடைகளில் வியாபாரம் குறைந்தது


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பஸ், ரெயில் நிலையங்கள் வெறிச்சோடின கடைகளில் வியாபாரம் குறைந்தது
x
தினத்தந்தி 19 March 2020 5:30 AM IST (Updated: 19 March 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்ததால் சேலத்தில் பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகளிலும் வியாபாரம் குறைந்தது.

சேலம்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இந்தியாவிலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

வெறிச்சோடின

இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலம், வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோர் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் பலர் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே சென்று வருகின்றனர். சேலம் புதிய பஸ்நிலையம் மற்றும் ஜங்சன் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வியாபாரம் குறைந்தது

பஸ் மற்றும் ரெயில்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சிலர் மட்டும் பஸ், ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். பயணிகள் கூட்டம் இல்லாததால் சேலம் புதிய பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் குறைந்துள்ளதால் அதன் உரிமையாளர்கள் வருமானமின்றி சிரமம் அடைந்து வருகின்றனர்.

சேலம் மாநகரில் பரபரப்பாக காணப்படும் கடைவீதி உள்ளிட்ட சில முக்கிய இடங்களும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் ஜவுளிக்கடை, நகைக்கடை, பேன்சி ஸ்டோர், ஓட்டல் உள்ளிட்டவைகளில் வியாபாரம் குறைந்தது.

Next Story