கொரோனா வைரஸ் எதிரொலி: மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் வெறிச்சோடின


கொரோனா வைரஸ் எதிரொலி: மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 19 March 2020 5:30 AM IST (Updated: 19 March 2020 3:57 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் எதிரொலியால் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் கைகளை கழுவிய பிறகே கோவில்களுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர்,

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கியதில் இதுவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். சுமார் 1½ லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரசால் 3 பேர் பலியாகியுள்ளனர். 130-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்களை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தியேட்டர்கள், பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டுகள்

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும், பூங்காக்களும், பிச்சாவரம் சுற்றுலா மையமும் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் பீதியால் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வெளியூர்களுக்கு பயணம் செய்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நேற்றும் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளுக்கு பெரும்பாலான பொதுமக்கள் வராததால் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோவில்கள்

இதேபோல் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்களுக்கு ஒரு சிலர் மட்டுமே வந்து சென்றதால், வெறிச்சோடிய நிலையிலேயே காணப்பட்டன. மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களுக்கு குறைந்த அளவிலேயே பயணிகள் வந்து சென்றதை காண முடிந்தது. ஆனால் ஓட்டல்கள், மருந்தகம், மளிகை கடைகள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்பட்டன. இதுதவிர கடலூர் பாடலீஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைகளை நன்கு கழுவிய பிறகே கோவில்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதாவது கோவில்களின் முன்பு சானி டைசர், திரவ சோப்பு உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கைகளை கழுவிய பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

மருத்துவ குழுவினர்

இதேபோல் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையங்களுக்கு வருபவர்கள் கைகளை கழுவிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்கின்றனர். சிதம்பரம் நடராஜர் கோவில்களுக்கு வரும் வெளிநாடு மற்றும் வெளிமாநில பயணிகளையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.


Next Story