கொரோனா வைரஸ் எதிரொலி: ரெயிலில் பயணிகள் கூட்டம் குறைந்தது


கொரோனா வைரஸ் எதிரொலி: ரெயிலில் பயணிகள் கூட்டம் குறைந்தது
x
தினத்தந்தி 20 March 2020 5:30 AM IST (Updated: 20 March 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவையில் இருந்து ரெயில் மூலம் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

கோவை,

சீனாவில் தோன்றிய கொரோனா நாடுமுழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவு வதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வெளியூர்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக ரெயில்களில் பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இது குறித்து கோவை ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

வருவாய் இழப்பு

கோவை ரெயில்நிலையம் வழியாக தினமும் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் செல்கின்றன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் வெளியூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் கோவையில் இருந்து வெளியூர் செல்லும் ரெயில்களில் பயணிகளின் கூட்டம் மிகவும் குறைந்து உள்ளது.

கோவையில் இருந்து செல்லும் ரெயில்களில் 7 நாட்களில் 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை ரெயிலில் பயணிப்பது வழக்கம். ஆனால் கடந்த 12-ந் தேதி முதல் நேற்று வரை 7 நாட்களில் முன்பதிவில்லா டிக்கெட் மூலம் மொத்தம் 96 ஆயிரத்து 259 பேர் பயணம் செய்து உள்ளனர்.அதன் மூலம் ரூ.85 லட்சத்து 10 ஆயிரத்து 812 வசூலானது. இதனால் ரெயில் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கிருமி நாசினி

கோவையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களும் ரத்து செய்யப் பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் கோவை ரெயில்நிலையத்தின் பிரதான வாயில் மற்றும் பின்புறம் உள்ள வாயில்களில் பயணிகளின் கைகளிலும், அவர்கள் கொண்டு வரும் உடைமைகளின் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

மேலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கி விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரெயில்நிலையத்தில் நடைமேடைகளில் உள்ள இருக்கைகளில் யாரும் உட்கார கூடாது என்பதற்காக தடுப்பு கயிறு கட்டி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story