ஆண்டிப்பட்டி அருகே எருக்கம்பால் கொடுத்து பெண் சிசு கொலை தாய்-பாட்டி கைது


ஆண்டிப்பட்டி அருகே எருக்கம்பால் கொடுத்து பெண் சிசு கொலை தாய்-பாட்டி கைது
x
தினத்தந்தி 20 March 2020 5:30 AM IST (Updated: 20 March 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே எருக்கம்பால் கொடுத்து பெண் சிசுவை கொலை செய்ததாக தாய், பாட்டி கைது செய்யப்பட்டனர்.

கண்டமனூர்,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மொட்டனூத்து ஊராட்சி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சுரே‌‌ஷ். இவரது மனைவி கவிதா (வயது 29). இந்த தம்பதிக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரே‌‌ஷ் கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்களது மூத்த மகள் பாண்டி மீனா(10) 4-ம் வகுப்பும், 2-வது மகள் ஹரிணி(8) 2-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கவிதா 3-வது முறையாக கர்ப்பமானார். எனவே பிரசவத்திற்காக கடந்த 20-ந்தேதி அவரை க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 26-ந்தேதி இரவு கவிதாவுக்கு சுகப்பிரசவத்தில் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. 2 நாட்கள் கழித்து 28-ந்தேதி தாயும், குழந்தையும் ராமநாதபுரத்தில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்தனர்.

சந்தேகம்

இந்நிலையில் கடந்த 2-ந்தேதி கவிதா கோழிக்கறி, நிலக்கடலை சாப்பிட்டதால், தாய்ப்பால் கொடுக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டுக்கு அருகே உள்ள இடத்தில் அடக்கம் செய்து உள்ளார். ஆனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இதில் சந்தேகமடைந்து குழந்தையின் சாவில் மர்மம் உள்ளது என மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம், ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தாசில்தார் சந்திரசேகர் மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் தேவியிடம் இதுகுறித்து விசாரிக்கும்படி அறிவுறுத்தினார். அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் தேவி ராமநாதபுரத்திற்கு சென்று கவிதாவிடமும் அவருடைய மாமியார் செல்லம்மாளிடமும் (55) விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதனால் சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் கவிதா மற்றும் செல்லம்மாள் ஆகியோரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ஆண்டிப்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சாகுல் அகமது, சவரியம்மாள்தேவி ஆகியோர் முன்னிலையில் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கவிதா மற்றும் அவருடைய மாமியார் செல்லம்மாள் ஆகியோர் 3-வதாக பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாது என்று கருதி எருக்கம்பால் கொடுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

கைது

இதைத்தொடர்ந்து நேற்று காலை ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகர் முன்னிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக கவிதா அழைத்து வரப்பட்டார். அங்கு கவிதா அடையாளம் காட்டிய இடத்தில் பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அரசு டாக்டர் ராஜபாண்டியன் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதில் எருக்கம்பால் கொடுத்து குழந்தையை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து பெண் சிசுவை கொலை செய்த தாய் கவிதா, பாட்டி செல்லம்மாள் ஆகியோரை ராஜதானி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story