திருப்பரங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி, கார் மோதி பலி: வங்கி பெண் ஊழியர் கைது
திருப்பரங்குன்றம் அருகே 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன், மனைவி பலியானார்கள்.
திருப்பரங்குன்றம்,
மதுரை வில்லாபுரத்தில் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 55). இவரது மனைவி வசந்தி (50). இவர்கள் இருவரும் நேற்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள கீழக்குயில்குடி சீனிவாச காலனிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சமயநல்லூர் பகுதியிலிருந்து திருமங்கலம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த காரை விளாச்சேரி மொட்டமலை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர் பிரியங்கா (30) என்பவர் ஓட்டி வந்தார். தனக்கன்குளம்-தென்பழஞ்சி ரோடு பிரிவு நான்கு வழிச்சாலை வளைவில் சீனிவாச காலனியை நோக்கி கண்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. அதில் அந்த தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்கள். தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் அங்கு வந்து உயிரிழந்த தம்பதியின் உடலை பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பிரியங்காவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். 10 கிராமத்தினர் இந்த பகுதியை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட இடத்தின் இருபுறமும் விபத்து பகுதி என்று எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர தீர்வாக சுரங்கப் பாதை அமைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story