தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு
தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த நாகூர் அனிபா, சின்னதங்கம் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
வருசநாடு அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியில் அரசுக்கு சொந்தமான வன பகுதியில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நன்கு வளர்ந்து காடு போல காட்சியளிக்கின்றன. இந்தநிலையில் அரசு அதிகாரிகள் இந்த மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இந்த மரங்களில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக நிற்கின்றன. ஒரு சில மரங்கள் நூறு ஆண்டுகளைக் கடந்தவை.
இந்த நிலையில் மரங்களை வெட்டக்கூடாது என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. மயிலாடும்பாறையில் உள்ள 5 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்களை எந்த காரணமும் இல்லாமல் வெட்டுவதை ஏற்க முடியாது. மரங்கள் வெட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறையும். எனவே தேனி மாவட்டம் மயிலாடும்பாறை பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மரங்களை வெட்டக்கூடாது என இடைக்கால தடை விதித்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மயிலாடும்பாறையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. இந்த வழக்கு பொதுநலன் கருதி தொடர்ந்ததாக தெரியவில்லை. எனவே வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story