மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரை தள்ளிவைக்க வேண்டும் - அரசுக்கு, குமாரசாமி கோரிக்கை


மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரை தள்ளிவைக்க வேண்டும் - அரசுக்கு, குமாரசாமி கோரிக்கை
x
தினத்தந்தி 22 March 2020 4:41 AM IST (Updated: 22 March 2020 4:41 AM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பட்ஜெட் கூட்டத் தொடரை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும் என்று அரசுக்கு, குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொேரானா வைரஸ் பரவுவதை தடுக்க வருகிற 31-ந் தேதி வரை பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரையும் தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேரக்கூடாது என்று அரசே வலியுறுத்தி உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவது சரியானது அல்ல. பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரே இடத்தில் கூடும் சூழ்நிலை இருக்கிறது. எனவே அரசு உடனடியாக பட்ஜெட் கூட்டத்தொடரை தற்காலிகமாக ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதுபோல, குமாரசாமி வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில் 'மக்கள் பெரிதும் பயன்படுத்தும் ஏ.டி.எம். மையங்களிலும் முன் எச்சரிக்கையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த விஷயத்திலும் அரசு கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.' என்று கூறியுள்ளார்.

கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரை தற்காலிகமாக தள்ளிவைப்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) கூடும் கூட்டத்தொடரின் போது விவாதித்து முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story