திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை


திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 8:04 PM GMT)

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார்.

திருச்சி,

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பொதுமக்களும் முக கவசம் அணிந்து கொள்கிறார்கள். இதனால், முக கவசங்கள் தேவை அதிகரித்துள்ளது. அதை பூர்த்தி செய்வதற்காக திருச்சி பூமாலை வணிக வளாகம், நம்பர் ஒன் டோல்கேட், பிச்சாண்டார் கோவில் ஆகிய இடங்களில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் முககவசம் மற்றும் கிருமி நாசினி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

திருச்சி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மருத்துவமனை ஆகியவற்றிற்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான முக கவசம் தேவைப்படுகிறது. முக கவசத்தை தொற்று நோய் உள்ளவர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை அளிப்பதற்கு தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளும் வசதி விரைவில் அமைய உள்ளது.

6 பேருக்கு மட்டுமே சிகிச்சை

பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 75 படுக்கை வசதிகள் உள்ளது. ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகிய மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளும், கூடுதலாக துறையூர் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த 18 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய் தாக்கம் இல்லை என சான்றிதழ் வந்துள்ளது. அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி வார்டில் ஏற்கனவே 8 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. அவர்களில் 4 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு சளி, இருமலுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆக, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 6 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு திருச்சி மாவட்ட அதிகாரியாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது செல்போன் எண்கள் 979114 6511, 9442 038951. கொள்ளை நோய் அதிகாரி செல்போன் எண் - 98434 16694.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்பு எண் 99523 87108. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்களை இந்த எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். நோய்க்கான அறிகுறி கண்டவர்களை கையாளும் பொருட்டு அனைத்து விதமான பயிற்சியும் வழங்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணிநேரமும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story