கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பூலாம்பட்டியில், விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பூலாம்பட்டியில், விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 8:58 PM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதை எடப்பாடி தாசில்தார் கோவிந்தராஜூ நேரில் பார்வையிட்டார்.

எடப்பாடி,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்கள் உள்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கி இருக்கிறது. மத்திய அரசு தெரிவித்துள்ள 80 மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளையும் முடக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்திற்கான போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்திட சேலம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும், ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டைக்கும் இடையே கதவணை நீர்த்தேக்க காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து வருகிற 31-ந் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தாசில்தார் ஆய்வு

இதைத்தொடர்ந்து பூலாம்பட்டியில் விசைப்படகு நிறுத்தப்படும் பகுதியில், எடப்பாடி தாசில்தார் கோவிந்தராஜூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா உடன் இருந்தார்.

விசைப்படகு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே பூலாம்பட்டியில் நேற்று நடைபெற இருந்த வாரச்சந்தையும் நடக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story