மக்கள் ஊரடங்கு முடிவடைந்ததும் வழக்கம்போல் பஸ்கள் ஓடின கடைகளும் திறக்கப்பட்டன


மக்கள் ஊரடங்கு முடிவடைந்ததும் வழக்கம்போல் பஸ்கள் ஓடின கடைகளும் திறக்கப்பட்டன
x
தினத்தந்தி 24 March 2020 5:30 AM IST (Updated: 24 March 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஊரடங்கு முடிவடைந்ததும் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வழக்கம்போல் பஸ்கள் ஓடின. அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

விழுப்புரம்,

கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நோயினால் இதுவரை இந்தியாவில் 7 பேர் இறந்துள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ரெயில்கள், கார், வேன், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடவில்லை. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரடங்கு உத்தரவிற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருந்தனர்.

பஸ்கள் ஓடின

இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று அதிகாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பஸ்களும் வழக்கம்போல் அதிகாலை 5 மணி முதல் இயக்கப்பட்டன. கடைகளையும் திறந்து வணிகர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் நேற்று விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, சேலம், திருச்சி, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் இன்னும் மக்களிடம் இருந்து விலகாததால் பஸ்களில் பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், இன்று (நேற்று) காலை முதல் இரவு வரை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 670 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். இவற்றில் பயணிகளின் தேவைக்கேற்ப நகர்ப் புற பஸ்கள், புறநகர் பஸ்கள் என 600 பஸ்கள் வரை இயக்கப்பட்டுள்ளன என்றனர்.

வேன், லாரிகளும் இயக்கப்பட்டன

அதேபோல் தனியார் பஸ்கள், கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், வேன், லாரிகளும் வழக்கம்போல் ஓடின. இருந்தபோதிலும் தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மக்கள் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், ஜவுளிக்கடைகள், நகை கடைகள், பூங்காக்கள், விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருந்தன. அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் விழுப்புரம் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

கடைகள் திறப்பு

ஆனால் ஓட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், பல்பொருள் அங்காடிகள், பெட்டிக்கடைகள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டன. இருப்பினும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக வழக்கத்திற்கும் மாறாக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

Next Story