கொரோனா எதிரொலியாக 31-ந் தேதி வரை அடைப்பு: டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள் கூட்டம்


கொரோனா எதிரொலியாக 31-ந் தேதி வரை அடைப்பு: டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 5:21 PM GMT)

கொரோனா வைரஸ் எதிரொலியாக டாஸ்மாக் கடைகள் 31-ந் தேதி வரை அடைக்கப்படுவதால் மதுபானங்கள் வாங்க மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமானதை விட மதுபானங்கள் விற்பனை இரு மடங்கு நடந்தது.

திருச்சி,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவது வேகமெடுத்துள்ளது. தமிழகத்திலும் இந்த வைரஸ் வேகமாக பரவ தொடங்கி உள்ளதால் அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 31-ந் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.

இதனால் டாஸ்மாக் கடைகளும் நேற்று மாலை 6 மணி முதல் அடைக்கப்பட்டன. வருகிற 31-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால், திருச்சியில் உள்ள மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்க டாஸ்மாக் கடைகளில் திரண்டனர். இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

இரு மடங்கு விற்பனை

பலர் மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றதை காணமுடிந்தது. சிலர் சாக்கு பையில் மூட்டை கட்டி வாங்கி சென்றனர். டாஸ்மாக் கடைகள் நேற்று பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6 மணி வரை இருந்தது. மாலை 6 மணிக்கு முன்னதாக கடை மூடப்படுகிற நேரத்தில் கூட சில இடங்களில் முண்டியடித்து கொண்டு மதுபாட்டில்களை பலர் வாங்கி சென்றனர். வழக்கமான மதுபானங்கள் விற்பனையை விட நேற்று இரு மடங்கு விற்பனையானதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து டாஸ்மாக் வட்டாரத்தினர் கூறுகையில், ‘‘திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 183 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் அனைத்திலும் இன்று (அதாவது நேற்று) மதுபானங்கள் விற்பனை இரட்டிப்பாக இருந்தது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை. சில கடைகளில் சரக்குகள் முழுவதும் காலியாகி விட்டன’’ என்றனர்.

Next Story