கொரோனா வைரஸ் எச்சரிக்கை: வங்கியில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள்


கொரோனா வைரஸ் எச்சரிக்கை: வங்கியில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள்
x
தினத்தந்தி 25 March 2020 5:00 AM IST (Updated: 25 March 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் எச்சரிக்கையால் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு வரிசையில் நின்றனர்.

திருக்கடையூர்,

திருக்கடையூர் மேல வீதியில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் திருக்கடையூரை சுற்றியுள்ள பகுதிகளான டி.மணல்மேடு, கன்னங்குடி, காடுவெட்டி, நட்சத்திரமாலை, பிள்ளைபெருமாள்நல்லூர், வேப்பஞ்சேரி, பிச்சக்கட்டளை, அபிஷேகக்கட்டளை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு கடும் கட்டுபாடு விதித்துள்ளது. அதனை பின்பற்றும் வகையில் திருக்கடையூரில் உள்ள மேற்கண்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை மேலாளர் இமயவர்மன், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நிற்கும்படி அறிவுறுத்தி உள்ளார். இதனை வாடிக்கையாளர்கள் ஏற்று கொண்டு கடைபிடித்தனர்.

பஸ்களில் சோதனை

நாகை மாவட்ட எல்லை பகுதிகளிலும், பஸ் நிலையங்களிலும் கொரோனா வைரசை தடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நாகை, நாகூர் பஸ் நிலையங்களுக்கு வரும் அனைத்து பஸ்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

பயணிகளின் விவரங்கள், எங்கிருந்து வந்தனர்? என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வந்தால் அவர்களின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்த பின்னரே ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நாகையில் வழக்கத்தை விட நேற்று காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.

சிறப்பு ஏற்பாடு

நாகை மாவட்டத்தில் 786 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் நடவடிக்கையாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா உத்தரவின் பேரில் கடைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதில் பொதுமக்கள் கூட கூடாது என்பதால், ஒவ்வொரு நபரும் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்பதற்காக கோடுகள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு போடப்பட்டுள்ள கோடுகளுக்குள் வரிசையில் நின்று பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் ரே‌‌ஷன்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் முககவசம் அணிந்தும், கைகளை சுத்தம் செய்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பும், சோப்பு மற்றும் வாளியில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

Next Story