சேலத்தில் உழவர் சந்தைகள் மூடப்பட்டன காய்கறிகள் சாலையோரம் விற்பனை


சேலத்தில் உழவர் சந்தைகள் மூடப்பட்டன காய்கறிகள் சாலையோரம் விற்பனை
x
தினத்தந்தி 25 March 2020 4:00 AM IST (Updated: 25 March 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

144 தடை உத்தரவு எதிரொலியாக சேலத்தில் உழவர் சந்தைகள் நேற்று மூடப்பட்டன. இதனால் வியாபாரிகள் சாலையோரம் காய்கறிகளை விற்பனை செய்தனர்.

சேலம்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. அதே போன்று பொது மக்கள் கூட்டம் கூடக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நேற்று சேலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி ஆற்றோர காய்கறி மார்க்கெட், செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்க நேற்று காலையிலேயே பொது மக்கள் குவிந்தனர்.

உழவர் சந்தைகள் மூடப்பட்டன

144 தடை உத்தரவு எதிரொலியாக பொது மக்கள் கூட்டம் அதிகம் கூடும் என்பதால் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகள் மூடப்பட்டன. இதனால் உழவர் சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் உழவர் சந்தை அருகே உள்ள சாலையோரம் வைத்து காய்கறிகளை விற்பனை செய்தனர்.

இதை பொது மக்கள் வாங்கிச்சென்றனர். வழக்கத்தை விட காய்கறிகள் நேற்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. அதாவது கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்த தக்காளி இரண்டு மடங்கு உயர்த்தி நேற்று ரூ.30-க்கு விற்பனை ஆனது. இதே போன்று அனைத்து காய்கறிகளின் விலையும் இரண்டு மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்பட்டன. இதனால் பொது மக்கள் புலம்பிச்சென்றனர்.

விலை வீழ்ச்சி

சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லிகைப்பூ ரூ.70-க்கும், ரூ.200-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.40-க்கும், ரூ.30-க்கு விற்ற அரளிப்பூ ரூ.10-க்கும் விற்பனை ஆனது. இதே போன்று அனைத்து பூக்களும் குறைந்த விலைக்கே விற்பனை ஆனது.

இது குறித்து வியாபாரிகளிடம் கேட்ட போது, பூக்களின் வரத்து அதிகம் ஆனதால், அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது என்று கூறினர். விவசாயிகளிடம் கேட்ட போது, பூக்கள் பறிக்கும் கூலிக்குகூட விற்பனை ஆகவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்று கூறினர்.

Next Story