துபாயில் இருந்து மதுரை வந்தவர்: கொரோனா முகாமில் இருந்து மாயமாகி காதலியை நள்ளிரவில் மணம் முடித்த வாலிபர்


துபாயில் இருந்து மதுரை வந்தவர்: கொரோனா முகாமில் இருந்து மாயமாகி காதலியை நள்ளிரவில் மணம் முடித்த வாலிபர்
x
தினத்தந்தி 27 March 2020 12:00 AM GMT (Updated: 26 March 2020 10:50 PM GMT)

துபாயில் இருந்து விமானத்தில் மதுரை வந்த வாலிபர், கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். அவர் திடீரென மாயமாகி தனது ஊருக்கு சென்று காதலியை நள்ளிரவில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நடந்துள்ளது. போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்து மீண்டும் முகாமில் தங்கவைத்தனர்.

மதுரை, 

துபாயில் இருந்து கடந்த 23-ந் தேதி 4 பேர் விமானத்தில் மதுரை வந்தனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து, பெருங்குடி அருகே சின்ன உடைப்பு கிராமத்தில் கொரோனா தடுப்புக்காக அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு கண்காணிப்பு முகாமில் தங்க வைத்தனர். அந்த 4 பேரில் சிவகங்கை மாவட்டம் இடையபட்டியை சேர்ந்த 23 வயதுடைய வாலிபரும் ஒருவர். இந்த நிலையில் சின்ன உடைப்பு முகாமில் இருந்து அந்த வாலிபர் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மாயமானார். முகாம் அமைந்துள்ள பகுதி முழுவதும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து முகாம் பொறுப்பாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் தங்கசாமி, மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனே அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி சென்றவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவரது செல்போன் எண் மற்றும் அவரது ஊரில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் தனது சொந்த ஊரில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்காகத்தான் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதற்கிடையே அந்த வாலிபர் தன்னைத்தேடி வந்திருப்பதை அந்த பெண்ணும் அறிந்துகொண்டார். இது குறித்து இருவரது உறவினர்களுக்கும் தெரியவந்தது. உடனே அந்த வாலிபருக்கும், அவருடைய காதலிக்கும் நள்ளிரவு நேரத்தில் ஒரு கோவிலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை நேற்று போலீசார் மடக்கி பிடித்து அறிவுரை கூறி மீண்டும் சின்ன உடைப்பு முகாமுக்கு அழைத்து வந்து தங்க வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

சின்ன உடைப்பு முகாமில் இருந்து நைசாக வெளியேறிய அந்த வாலிபர், மதுரை ரிங் ரோடு பகுதிக்கு வந்துள்ளார். ஊருக்கு செல்ல பஸ் ஓடாததால், யாரிடமாவது லிப்ட் கேட்டு சென்றுவிடலாம் என நினைத்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மறித்து லிப்ட் கேட்டு தனது ஊரை அடைந்துள்ளார்.

அங்கு சென்றதும் காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார். சின்ன உடைப்பு கிராமத்தில் அவர் தப்பிச் சென்ற பின்பு யார், யாரை சந்தித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி தகவல்களை திரட்டி வருகிறோம். அவர் சந்தித்த நபர்களை தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறோம்.

அந்த வாலிபருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. இருந்தாலும் அவரை கைது செய்து மீண்டும் முகாமில் தங்க வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story