மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது - பலி 8 ஆக உயர்வு


மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது - பலி 8 ஆக உயர்வு
x
தினத்தந்தி 29 March 2020 11:02 PM GMT (Updated: 29 March 2020 11:02 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இருவர் உயிரிழந்து இருப்பதால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து இருக்கிறது.

மும்பை, 

கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் மின்னல் வேகமாக உருவெடுத்து உள்ளது. இந்த உயிர்கொல்லி தொற்று நோய்க்கு நேற்று முன்தினம் வரை 181 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று ஒரே நாளில் 22 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 203 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 200-ஐ தாண்டி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

புதிய நோயாளிகளில் மும்பையில் 10 பேரும், புனேயில் 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாக்பூரில் 3 பேர், அகமத் நகரில் 2 பேர், சாங்கிலி, ஜல்காவில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால் சற்று ஆறுதல் தரும் செய்தியாக இதுவரை 34 கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்பி இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார். அவர்கள் 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பலி 8 ஆக உயர்வு

இதற்கிடையே மாராட்டியத்தில் கொடிய கொரோனா வைரஸ் 85 வயது டாக்டர் உள்பட 6 பேரின் உயிரை குடித்து இருந்தது. இந்த நிலையில் கொரோனாவுக்கு மேலும் பெண் உள்பட இருவர் பலியாகி உள்ளனர்.

மும்பையை சேர்ந்த 40 வயதான பெண் மூச்சுத்திணறல், நெஞ்சு வலியால் மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரியில் கொரோனா தனிமை வார்டில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்தபெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை, இறப்புக்கு பிறகு நேற்று வந்தது. அதில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல நேற்று புல்தானா மாவட்டத்தில் 45 வயது ஆண் ஒருவர் கொடூர கொரோனாவுக்கு உயிரிழந்தார்.

இதனால் மராட்டியத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 7 பேர் மும்பை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story