ஈரோட்டில் சாஸ்திரிநகர், மரப்பாலம் தனிமைப்படுத்தப்பட்டது - கிருமி நாசினி தெளிக்கும் பணியை எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டனர்


ஈரோட்டில் சாஸ்திரிநகர், மரப்பாலம் தனிமைப்படுத்தப்பட்டது - கிருமி நாசினி தெளிக்கும் பணியை எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 30 March 2020 10:15 PM GMT (Updated: 30 March 2020 8:23 PM GMT)

ஈரோட்டில் சாஸ்திரிநகர் மற்றும் மரப்பாலம் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது. அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் பார்வையிட்டனர்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்று ஈரோடு சாஸ்திரி நகர் மற்றும் மரப்பாலம் பகுதிகளில் குறிப்பிட்ட சில வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. சாஸ்திரிநகர் பகுதியில் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பணியாற்றிய பெண் டாக்டர் தங்கி இருந்தார். அவருக்கும், அவரது 10 மாத குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. எனவே அவருடன் தொடர்பில் இருந்த மற்ற நபர்கள் மற்றும் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

முதல் கட்டமாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று காலை நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அந்த பகுதி மக்களுக்கு உரிய விளக்கங்கள் அளித்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். எம்.எல்.ஏ.க்கள், கிருமி நாசினி தெளிக்கும் குழாயை வாங்கி அவர்களே சிறிதுநேரம் வீதிகளில் கிருமி நாசினி தெளித்தனர்.

இதுபோல் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தனிமைப்படுத்தப்பட்டவர்களை பார்வையிட்டு தனித்திருப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். தொடர்ந்து சுகாதாரப்பணியாளர்கள் தனித்து இருக்க வைக்கப்படுபவர்களின் கைகளில் முத்திரையிட்டனர். வீடுகளிலும் அதற்கு உரிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதியில் சுல்தான்பேட்டை பள்ளிவாசலையொட்டிய மஜித் வீதி, புது மஜித் வீதி, கொங்கலம்மன் கோவில் வீதிகள் மற்றும் கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் முதலில் தனிமைப்படுத்தப்பட்டன. அடுத்து கொடுமுடி, பவானி, அந்தியூர் என்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தனித்திருப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களும் தனித்திருப்பில் வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் ரெயில்வேகாலனி பகுதி தனித்திருப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதையொட்டி உள்ள சாஸ்திரி நகர் மற்றும் மரப்பாலம் பகுதிகளில் குறிப்பிட்ட சில வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பது அங்கு பிற மக்கள் சென்று தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுத்தி விடக்கூடாது. இங்கு இருப்பவர்கள் வெளியே சென்று கொரோனா தொற்றுக்கு காரணமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான். அதற்காக இங்கு இருப்பவர்கள் அல்லது முத்திரையிடப்பட்டவர்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் என்று எண்ண வேண்டாம். இவர்களுக்கு வருவதற்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. எனவே வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், குடிதண்ணீர், மருந்து ஆகியவை சிரமமின்றி கிடைக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் மருத்துவக்குழுவினர் இவர்களை பரிசோதனை செய்து கண்காணித்து வருவார்கள். எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை”, என்றனர்.

Next Story