மக்கள் வெளியே வர தடை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் வசித்த பகுதிகளுக்கு சீல்


மக்கள் வெளியே வர தடை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் வசித்த பகுதிகளுக்கு சீல்
x
தினத்தந்தி 2 April 2020 3:45 AM IST (Updated: 2 April 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிக்கு போலீசார் சீல் வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த பலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்று வந்தவர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம், போலீசார் உதவியுடன் சேகரிக்க தொடங்கியது.

இதில் மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் மற்றும் தபால்தந்தி நகரைச் சேர்ந்த 45 வயது நபர் டெல்லி சென்று வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த இருவரையும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களின் ரத்தம், சளி ஆகியவற்றை பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் வசித்து வந்த பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன்படி அவர்கள் வசித்து வந்த பகுதிக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, அந்த பகுதி 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் யாருக்காவது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனே போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் 4 நாட்கள் மக்கள் வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரில் கொரோனாவால் இறந்தவர் வசித்த அண்ணாநகர் பகுதி, விளாங்குடியில் ஒரு பகுதி, எஸ்.எஸ். காலனியில் ஒரு தெரு ஆகியவை ஏற்கனவே கொரோனா பாதிப்பு உள்ளதாக கருதி சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story