திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
x
தினத்தந்தி 8 April 2020 12:00 AM GMT (Updated: 7 April 2020 8:05 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர், 

உலகையே ஆட்டிப்படைக்கும் கிருமி கொரோனா. தனது அணு ஆயுதத்தால் உலகை மிரட்டும் அமெரிக்கா இன்றைய காலக்கட்டத்தில் கொரோனாவால் மிரண்டு கிடக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலும் மருந்து, மாத்திரைகளை தந்து உதவுங்கள் என்று இந்தியாவிடம் உதவிக்கரம் கேட்கிறது. அந்த அளவுக்கு எதற்கும் அடங்க மறுக்கும், மனித இனத்தை வேரறுக்க துடிக்கும் கொரோனாவின் கொட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எவ்வளவு தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் அதையும் மீறி மனிதருக்குள் புகுந்து வெறியாட்டம் போடுகிறது.

தமிழ்நாட்டிலும் இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த வைரசை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது மட்டுமே தற்போதைய தீர்வு என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இந்த நிலையில்தான் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கும் என்பதால், அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வர வேண் டும் என அரசு அழைப்பு விடுத்தது. மேலும், மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டது.

அதன்படி இந்த மாநாட்டில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 69 பேர் பங்கேற்றது தெரியவந்தது. இவர்களின் 39 பேர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 10 பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையிலும், 10 பேர் உடுமலை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், 10 பேர் குறித்த தகவல்களை அறிய அவர்களது முகவரியை வைத்து போலீசார் அடையாளம் கண்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் முதற்கட்டமாக டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 6 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதுஅவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 6 பேரும் திருப்பூர் காங்கேயம் ரோடு, பெரிய தோட்டம், சுகுமார்நகர், சிக்கண்ணா கல்லூரி பின்புறம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் டெல்லி மாநாட்டுக்கு சென்று விட்டு திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று அவர்களின் ரத்தம் மற்றும் சளி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறியதாவது:-

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும், 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் ஆவர். இவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொண்டதில் அதில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 13 பேரும் ஆண்கள்.

இதில் திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்த 52 மற்றும் 45 வயதுடைய 2 பேர், அவினாசி அருகே உள்ள தேவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த 32, 55, 30, 36 வயதுடைய 4 பேர், உடுமலை பகுதியை சேர்ந்த 63, 42, 32 வயதுடைய 3 பேர், தாராபுரம் பகுதியை சேர்ந்த 22, 60, 54, 14 வயதுடைய 4 பேர் என மொத்தம் 13 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 13 பேரும் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த 13 பேர் உள்பட ஏற்கனவே உள்ள 6 பேர் என மொத்தம் 19 பேரும் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளும் உரிய நேரத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் செல்லவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாதிப்புகள் உள்ள மங்கலம், அவினாசி தேவாரயம்பாளையம், உடுமலை, தாராபுரம் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளும், அதன் சுற்றுப்புற பகுதிகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.

மேலும், அந்த பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தடுப்பு வைத்து பொதுமக்கள் வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்யப்படும். மேலும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் மருத்துவக்குழு மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் ஏற்கனவே இங்கிலாந்து சென்று வந்த தொழிலதிபர் ஒருவர் தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story