ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 19 April 2020 5:00 AM IST (Updated: 19 April 2020 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

நம்பியூர், 

நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோசணம், பொலவபாளையம் ஆகிய ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், மளிகை பொருட்கள், காப்பீடு சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார். அதன்பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்திற்கு தேவையான ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட உள்ளன. இந்த கருவிகளை பயன்படுத்தி அதிகமான பரிசோதனைகளை செய்ய முடியும்.

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மேலும் 7 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அங்கு 120 தனித்தனி படுக்கைகள் தாயாராக உள்ளன. ஆஸ்பத்திரியில் ஒரே சுவாச கருவியில் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இருந்தது. தற்போது 4 பேர் பயன்படுத்தும் வகையில் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 29 பேர் குணமடைந்து உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பேக்கரிகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயக்கி கொள்ளலாம். அதில் டீ, காபி விற்பனை செய்யக்கூடாது. விவசாய பணிகளுக்கு எந்தவித தடையும் கிடையாது. விவசாய பணிகளை மேற்கொள்பவர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் அனுமதி கடிதம் பெற்று பணிகளை தொடரலாம். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மா.பாவேசு, நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த அகல் வெல்பர் சொசைட்டி உறுப்பினர்கள் சார்பில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்காக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.

Next Story