ராமநாதபுரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை: தற்காலிக மார்க்கெட்டை தண்ணீர் சூழ்ந்தது
ராமநாதபுரத்தில் நேற்று காலையில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் தற்காலிக மார்க்கெட் பகுதியை மழைநீர் சூழ்ந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தாலும், மின்விசிறிகள் ஓடினாலும் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவிற்கு வெப்பம் அதிகமாக இருந்தது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென பலத்த இடி-மின்னல் ஏற்பட்டு மழை பெய்தது. இந்த மழையால் ராமநாதபுரத்தில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு ஏதுவாக ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை பெய்த மழையால் தற்காலிக மார்க்கெட் பகுதியை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதிலும் சிரமம் ஏற்பட்டது.
இதேபோல ராமநாதபுரம் நகரின் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. அதிகாலையில் பெய்த மழையால் கடந்த சில நாட்களாக வெப்ப தாக்கத்தில் இருந்து வந்த மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- ராமநாதபுரம்-41, திருவாடானை-21.6, தொண்டி-25.8, வட்டாணம்-2.
Related Tags :
Next Story