உச்சிப்புளி அருகே வீட்டில் சாராயம் தயாரித்த வாலிபர் கைது; 20 லிட்டர் பறிமுதல்
உச்சிப்புளி அருகே சேர்வைக்காரன் ஊரணியில் வீட்டில் சாராயம் தயாரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
பனைக்குளம்,
கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் மதுபாட்டில் கிடைக்காமல் புலம்பி வருகின்றனர். இந்தநிலையில் உச்சிப்புளி அருகே சேர்வைக்காரன் ஊரணியில் உள்ள வீடு ஒன்றில் சாராயம் தயாரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத் தது.
இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரத்னவேல், போலீசார் முத்துப்பாண்டி, வடிவேல், கதிர்வேல் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீடு ஒன்றை சோதனை செய்தபோது வீட்டினுள் குக்கரில் சாராயம் தயார் செய்து வருவதை பார்த்த போலீசார் 20 லிட்டர் சாராயம், அதற்கு பயன்படுத்தப்பட்ட குக்கர், மண்பானை, குடம் உள்ளிட்ட பல பொருட்களையும் பறிமுதல் செய்ததுடன் கருணாகரன்(வயது 35) என்பவரையும் கைது செய்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் செல்போனில் யூ டியூப் மூலம் சாராயம் தயாரிப்பது குறித்து வீடியோவை பார்த்து அதன்படி தயாரித்ததாகவும், விற்பனை செய்ய தயார் செய்யவில்லை, தான் குடிக்கவே தயாரித்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story