கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய நலவாழ்வு திட்ட இயக்குனர் அதிகாரிகளுடன் ஆலோசனை

நாமக்கல்லில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய நலவாழ்வு திட்ட இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாமக்கல்,
தேசிய நலவாழ்வு திட்ட இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் மெகராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எத்தனை பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பதை கேட்டறிந்தார்.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களை கண்டறிய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சைக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள படுக்கை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உணவு குறித்து கேட்டறிந்தார். மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, அரசு ஆஸ்பத்திரி டீன் சாந்தா அருள்மொழி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சித்ரா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story