கொரோனா தொற்று நோய் பரப்புதல் வழக்கு: சேலத்தில் மேலும் 2 பேர் கைது - சென்னை புழல் சிறையில் அடைப்பு


கொரோனா தொற்று நோய் பரப்புதல் வழக்கு: சேலத்தில் மேலும் 2 பேர் கைது - சென்னை புழல் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 25 April 2020 11:00 PM GMT (Updated: 25 April 2020 9:03 PM GMT)

சேலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரப்புதல் வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேலம், 

இந்தோனேசியா நாட்டில் இருந்து 11 முஸ்லிம் மதபோதகர்கள் கடந்த மாதம் சேலத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சூரமங்கலம், அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை, கிச்சிப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 5 மசூதிகளுக்கு சென்று தங்கியிருந்து மதப்போதனையில் ஈடுபட்டனர். இவர்களில் 4 முஸ்லிம் மதபோதகர்கள் மற்றும் அவர்களுடன் வந்த சென்னை வழிகாட்டி ஒருவர் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

தொடர்ந்து இந்தோனேசியா நாட்டை சேர்ந்த மற்ற மதபோதகர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரும் ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இதற்கிடையே இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 11 முஸ்லிம் மதபோதகர்களும் சுற்றுலா விசாவில் வந்து மதப்பிரசாரத்தில் ஈடுபட்டதாக சேலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் சேகர் கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 11 முஸ்லிம் மதபோதகர்கள், வழிகாட்டி மற்றும் அவர்கள் அழைத்து சென்றவர்கள் உள்பட 18 பேர் மீது தெரிந்தே தொற்றுநோய் பரப்புதல், சுற்றுலா விசாவில் விதிமுறைகளை மீறி நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இந்தோனேசியா முஸ்லிம் மதபோதகர் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த மற்ற 2 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால் அவர்களை போலீசார் கண்காணித்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதனால் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரையும் சேலம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கைது செய்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றி ஆத்தூர் கிளை சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.

ஆனால் சிறை நிர்வாகம் அவர்களை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி போலீசார் அவர்கள் 2 பேரையும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

Next Story