சிங்கம்புணரியில் கொரோனாவால் முடங்கிய பொரி தொழில்


சிங்கம்புணரியில் கொரோனாவால் முடங்கிய பொரி தொழில்
x
தினத்தந்தி 26 April 2020 4:30 AM IST (Updated: 26 April 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் கொரோனா காரணமாக பொரி தயாரிக்கும் தொழில் முடங்கியது.

சிங்கம்புணரி, 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் அதிக அளவில் பொரி தயாரிக்கப்படுகிறது. இங்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 10-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் பொரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மற்ற ஊர் பொரியை விட சிங்கம்புணரியில் தயாராகும் பொரிக்கு சுவை அதிகம். அதாவது, மற்ற ஊர்களில் தயாராகும் பொரியில் உப்பு சுவை கூடுதலாக இருக்கும். ஆனால், சிங்கம்புணரி பகுதியில் தயாராகும் பொரி உப்புடன், இனிப்பு சுவையும் கொண்டதாக இருக்கும். மேலும் காரப்பொரி, இனிப்பு பொரி, மசாலா பொரி உள்ளிட்ட பல வகைகளில் பொரி தயாரிக்கப்படுகிறது.

120 லிட்டர் கொண்ட பொரி மூடையாக கட்டப்பட்டு சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி ஆகிய பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படும். ஒரு நாளைக்கு குறைந்தது 100 மூடை வரை பொரி உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு மூடை ரூ.380-க்கு வெளி மாவட்டங்களுக்கு தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கினால் பொரி தயாரிக்கும் தொழில் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெயில் அதிகமாக இருந்தால் மட்டுமே அரிசியை காயப்போட்டு பொரி தயாரிக்க முடியும். ஆனால் தற்போது வெயில் இருந்தும், கொரோனாவால் இந்த தொழில் தடைபட்டுள்ளது. இதனால் பொரி தயாரிக்கும் கம்பெனிகளில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் வேலையின்றி, வருமானம் இழந்து தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்த தொழிலை நடத்தி வரும் மகேசுவரன் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பால், ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பொரி மூடைகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்த மூடைகளில் உள்ள பொரி குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே மொறு மொறு தன்மை கொண்டதாக இருக்கும். அதன்பின்னர், சுவையற்று போகும் வாய்ப்பு உள்ளதால், அவற்றை விற்பனை செய்ய முடியாது. இதனால் சிங்கம்புணரியில் சிறப்பு பெற்ற பொரி தொழில் தற்போது நலிவடைந்துள்ளது.

இந்தநிலையில் சிறு, குறு தொழில்கள் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் மீண்டும் பொரி தயாரிக்க ஆயத்தமாகி வருகிறோம். பொரி தயாரிக்க எரிபொருளான தென்னை மட்டைகள், விறகுகள் கிடைக்காமல் தடுமாறுகிறோம். மேலும் பொரி தயாரிப்பு செலவு, அதை வாகனங்கள் மூலம் வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல ஏற்படும் செலவு தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 

பெரும்பாலான கடைகள் திறக்கப்படாததால் பொரி விற்பனையில் தொய்வு ஏற்படும். எனவே தற்போது குறைந்த அளவில் தயாரித்து உள்ளூர் பகுதியில் விற்பனை செய்ய உள்ளோம்” என்றார்.

Next Story