ஊரடங்கு உத்தரவு எதிரொலி: வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ டிரைவர்கள்


ஊரடங்கு உத்தரவு எதிரொலி: வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ டிரைவர்கள்
x
தினத்தந்தி 27 April 2020 8:32 AM IST (Updated: 27 April 2020 8:32 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

தேனி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மேலும் 19 நாட்களுக்கு, அதாவது அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் சிறு தொழில்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை முடங்கிவிட்டன. தொழிலாளர்களும் வேலையிழந்து பரிதவித்து வருகின்றனர். இதற்கிடையே எப்போதும் பரபரப்பாக சாலையில் சுற்றிவரும் ஆட்டோக்கள் தற்போது ஊரடங்கால் ஓய்வு எடுக்கின்றன. ஆனால் ஆட்டோ டிரைவர்களோ வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்கள்

தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. அவற்றில் தேனி நகர் பகுதியில் மட்டும் 2 ஆயிரத்து 500 ஆட்டோக்கள் இயங்கி வந்தன. இந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அது போதுமானதாக இல்லை என்று ஆட்டோ டிரைவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். வருமானம் இல்லாததால், அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

வாழ்வாதாரம்

இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை 5-க்கும் மேற்பட்ட பருத்தி ஆலைகள் இயங்கி வந்தன. ஆனால் அவை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டன. இதனால் அங்கு வேலை செய்த பலரும் வேலை இழந்தனர். இதையடுத்து அவர்களில் பலரும் தற்போது ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒருமாத காலமாக வீடுகளில் முடங்கியுள்ளோம். போதிய வருமானம் இன்றி தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். எனவே அரசு எங்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்றனர்.


Next Story