விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பு: காய்கறி வாங்க மக்கள் திரண்டதால் பரபரப்பு


விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பு: காய்கறி வாங்க மக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 April 2020 3:52 AM IST (Updated: 28 April 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கடைகளில் காய்கறி வாங்க மக்கள் அதிக அளவில் திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 48 பேரில் 37 பேர் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களில் சிலருக்கு சமூக தொற்றாக இந்நோய் பரவியது தெரியவந்துள்ளது. இதனால் விழுப்புரம் நகரில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே அதுவும் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மட்டும் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்ல வசதியாக வண்ண அனுமதி அட்டை வழங்கப்பட்டது. இந்த நடைமுறையின்படி சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்சென்றனர்.

குற்றச்சாட்டு

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று வணிகர் சங்கத்தினர் அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தினர். அதேபோல் காய்கறி வியாபாரிகளும் வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே கடைகளை திறப்பது என முடிவு செய்து முன்னறிவிப்பின்றி கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 4 நாட்கள் காய்கறி கடைகளை மூடிவிட்டனர். இதனிடையே கடந்த 25-ந் தேதி (சனிக்கிழமை) மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை வணிகர் சங்கத்தினர் திறந்து வியாபாரம் செய்தனர். இதனால் பொருட்களை பெற ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடைவீதிகளிலும், மார்க்கெட் பகுதியிலும் கூடினர். இதனால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லாததால் கொரோனா தொற்று பரவும் அபாயத்திற்கு மாவட்ட நிர்வாகம் வழிவகுத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டினர்.

பழைய நடைமுறை மீண்டும் அமல்

இதையடுத்து விழுப்புரம் நகரில் திங்கட்கிழமை (நேற்று) முதல் அரசு விதித்துள்ள நேரத்தின்படி காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற 6 நாட்களும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும் என்றும், மீண்டும் பழைய முறைப்படியே வாரத்திற்கு ஒருநாள் மட்டும் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே வெளியே வந்து வண்ண அனுமதி அட்டை முறைப்படி அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லலாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று திங்கட்கிழமைக்குரிய வண்ண அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்சென்றனர்.இவர்கள் அனைவரையும் போலீசார் வழிமறித்து அனுமதி அட்டை வைத்துள்ளனரா? என சோதனை செய்த பின்னரே கடைகளுக்கு செல்ல அனுமதித்தனர். அனுமதி அட்டை இல்லாமல் வெளியே வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நடைமுறையால் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை பெற வந்த மக்களின் கூட்டம் ஓரளவு குறைந்து காணப்பட்டது.

காய்கறி கடைகளில் கூட்டம்

ஆனால் கடந்த 4 நாட்கள் காய்கறி கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததால் காய்கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் 5-ம் நாளான நேற்று காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. விழுப்புரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தற்காலிக உழவர் சந்தையான காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் கடைகள் திறக்கப்பட்ட காலை 6 மணி முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு கடையிலும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிவாங்க அலைமோதினர். எங்கும் சமூக இடைவெளி இல்லாததை கண்ட போலீசார், ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இருப்பினும் பொதுமக்கள் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் கடைகள் எந்த நேரத்திலும் மீண்டும் மூடப்பட்டு விடும் என எண்ணி கொரோனா அச்சமின்றி காய்கறி வாங்குவதையே குறிக்கோளாக கொண்டிருந்தனர்.

போலீசார் திணறல்

இதன் காரணமாக நகரில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், காய்கறி வாங்க திரண்டிருந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடை பிடிக்கும்படி ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக்கொண்டே இருந்தனர். இருப்பினும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இதனால் பொதுமக்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போலீசார் மிகவும் திணறினர்.

அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கடைகளில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்குள் போலீசாருக்கு பெரும் தலைவலியே உண்டாகிவிட்டது. இந்த சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

4 நாட்களாக காய்கறி வாங்க முடியாமல் சிரமப்பட்ட மக்கள் நேற்று கடைகள் திறந்ததும் ஒரே நேரத்தில் காய்கறி வாங்க திரண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இனி வாரத்தில் 6 நாட்களும் காய்கறி கடைகள் இயங்கும் என்பதால் நாளை (இன்று) முதல் நிலைமை சரியாகி விடும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story