கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது ஈரோடு; சிகிச்சையில் இருந்த 4 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்


கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது ஈரோடு; சிகிச்சையில் இருந்த 4 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 29 April 2020 5:45 AM IST (Updated: 28 April 2020 10:39 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கடைசியாக சிகிச்சையில் இருந்த 4 பேரும் குணம் அடைந்து வீட்டுக்கு சென்றதால், கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது.

ஈரோடு, 

சீனாவில் இருந்து உலகம் எங்கும் பரவி அனைவரையும் திகிலுக்கு உள்ளாக்கி இருக்கிறது கொரோனா வைரஸ் கோவிட்19. உலகில் உள்ள 210 நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உள்ளது. இந்தியாவும் இதற்கு விதி விலக்கு அல்ல. கேரள மாநிலத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் குறுகிய காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இந்த நோய் பரவியது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு என்று 3 மாவட்டங்களும் ஒரே நேரத்தில் கொரோனா கண்டறியப்பட்ட மாவட்டங்களாக இருந்தன. ஈரோட்டில் முதல் கொரோனா பாதிப்பு மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் முதன் முதலில் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது ஈரோடு. தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனது கணக்கை ஈரோட்டில் தொடங்கியது கொரோனா. அதில் இருந்து ஈரோடு மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். தாய்லாந்தை சேர்ந்த மேலும் ஒருவர், அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள், குடும்பத்தினர், புதுடெல்லி சென்று வந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என்று ஈரோட்டில் 64 பேர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஒருவர் உயிரிழப்பு

இதற்கிடையே ஈரோடு ரெயில்வே காலனி ரெயில்வே ஆஸ்பத்திரியில் பணியாற்றிய பெண் டாக்டர், அவரது குடும்பத்தினர் 4 பேர் கொரோனா பாதிப்பால் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட னர். சென்னிமலையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்படி 69 பேர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும், கோவை மற்றும் திருச்சியிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

பெருந்துறையை சேர்ந்த முதியவர் ஒருவர் தீவிர காய்ச்சலால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 70. ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.

குணம் அடைந்தனர்

திருச்சியில் சிகிச்சை பெற்ற வாலிபர் வெற்றிகரமாக சிகிச்சையை முடித்து கொரோனாவை வென்று ஈரோடு திரும்பினார். ஈரோட்டில் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் முதன் முதலாக குணமாகி கணக்கை தொடங்கி வைத்தவர் இவர். அவரைத்தொடர்ந்து ஒவ்வொருவராக குணம் அடைய தொடங்கினார்கள். கோவையில் இருந்தவர்களும் குணம் அடைந்து வீட்டுக்கு சென்றனர். பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து குணம் அடைந்தவர்களை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

ஒட்டு மொத்தமாக 65 பேர் குணம் அடைந்து வீடு திருப்பிய பின்னர் 4 பேர் மட்டுமே தொடர் சிகிச்சையில் இருந்தனர். அவர்களும் முற்றிலும் குணம் அடைந்து விட்டதாக நேற்று முன்தினம் டாக்டர்கள் உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை அவர்களை வீட்டுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வழியனுப்பி வைப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, தோப்பு என்.டி.வெங்கடாசலம், இ.எம்.ஆர்.ராஜா, ஈஸ்வரன் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மணி, ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், ஆர்.டி.ஓ. முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அடைந்த ஒருவர் தவிர அனைவரும் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். முதன் முதலாக கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட ஈரோடு முதன் முதலாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்திருக்கிறது. கடந்த 13 நாட்களாக வேறு யாருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்படவில்லை.

இது மிகப்பெரிய சாதனையாக உள்ளது. இதற்கு காரணம், அரசு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அறிவுரைகளை முழுமையாக செயல்படுத்திய கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் மற்றும் அதிகாரிகளாவர். அதிகாரிகள், களத்தில் நின்று போராடிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மின்சார வாரியத்தினர், ஊரக உள்ளாட்சி துறையினர் என்று அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக சாதித்து காட்டி இருக்கிறார்கள்.

Next Story