ராமநாதபுரம் அருகே பறவைகளை நூதன முறையில் வேட்டையாடியவர் கைது
ராமநாதபுரம் அருகே பறவைகளை நூதன முறையில் வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் பகுதியில் பறவைகளை வேட்டையாடி ஒரு வீட்டில் வைத்திருப்பதாக ராமநாதபுரம் வனச்சரகர் சதீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவரது தலைமையில் வனவர் ராஜேஷ், வனக்காப்பாளர் ஜோசப், வனக்காவலர் செல்வராஜ் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீரையா (வயது 46) என்பவரது வீட்டில் 3 வெள்ளை அரிவாள் மூக்கன், 6 வல்லூறு, 5 கதுவாலி ஆகிய பறவைகள் வேட்டையாடி உயிருடன் வைத்திருந்தது தெரியவந்தது.
கூண்டில் வைத்திருந்த இந்த பறவைகளையும், வேட்டையாட பயன்படுத்திய வலைகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர் வீரையாவை கைது செய்தனர்.
இதுகுறித்து வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:-
பறவைகளை வீரையா நூதன முறையில் வேட்டையாடி வந்துள்ளார். குறிப்பாக வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகளை பிடித்து அதன் கண்களை தைத்து நீர்நிலைகள் மற்றும் வயல்வெளி பகுதிகளில் வலையை விரித்து அதன் மீது நிற்க வைத்துள்ளார்.
கண்கள் தைக்கப்பட்டதால் பறக்க முடியாமல் அந்த இடத்திலேயே நிற்கும் இந்த பறவைகளை பார்த்து, தங்கள் இன பறவை நிற்பதாக கருதி வலைகளை நோக்கி வரும் மற்ற பறவைகளை வேட்டையாடி அதிக விலைக்கு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பறவை கண்களை திறக்கக்கூடாது என்பதற்காக தைத்தது கொடூர செயல் ஆகும். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தைக்கப்பட்டுள்ள பறவைகளின் கண்கள் திறக்கப்பட்டு அனைத்து பறவைகளும் சரணாலய பகுதியில் விடப்படும். இறந்த பறவைகளை பாடம் செய்தும், பறவைகளின் குரல் ஒலியை பயன்படுத்தியும் வேட்டையாடி வந்தனர். தற்போது நூதன முறையில் சித்ரவதை செய்து கண்களை தைத்து வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story