விழுப்புரம் மாவட்டத்தில் அரசு டாக்டர் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு டாக்டர் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 30 April 2020 4:59 AM IST (Updated: 30 April 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டர் உள்பட 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் நேற்று முன்தினம் வரை 48 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், அரிசி ஆலை அதிபர் என 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

23 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 23 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 பேர் பாதிப்பு

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 142 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றது. இவர்களில் 140 பேருக்கு நோய் தொற்று இல்லாத நிலையில் 29 வயதுடைய அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவருக்கும், 45 வயதுடைய காய்கறி வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் அந்த டாக்டர் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் விழுப்புரத்தில் உள்ள மாற்றியமைக்கப்பட்ட அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். காய்கறி வியாபாரிக்கு சொந்த ஊர் விழுப்புரம் அருகே உள்ள வடகுச்சிப்பாளையம் கிராமமாகும்.

50 ஆக உயர்ந்தது

இதையடுத்து அவர்கள் இருவரும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் எவ்வாறு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது? என்றும், சமூக பரவலால் ஏற்பட்டதா? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்புகள் அமைப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு டாக்டர், காய்கறி வியாபாரி ஆகியோர் வசிக்கும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

Next Story