கொரோனாவால் 38 பேர் பாதிப்பு எதிரொலி: தனிமைப்படுத்தப்பட்ட நகரமாக மாறிய விழுப்புரம்


கொரோனாவால் 38 பேர் பாதிப்பு எதிரொலி: தனிமைப்படுத்தப்பட்ட நகரமாக மாறிய விழுப்புரம்
x
தினத்தந்தி 1 May 2020 5:29 AM GMT (Updated: 2020-05-01T10:59:08+05:30)

கொரோனா வைரஸ் தொற்றால் 38 பேர் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக விழுப்புரம் நகரம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 38 பேர் விழுப்புரம் நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து இவர்கள் வசிக்கும் பகுதிகளான விழுப்புரம் முத்தோப்பு, திடீர்குப்பம், அகரம்பேட்டை, கமலா நகர், கைவல்லியர் தெரு, சித்தேரிக்கரை, சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி, பானாம்பட்டு, விழுப்புரம் கே.கே.சாலை ரஹீம் லே-அவுட், பூந்தமல்லி தெரு, கந்தசாமி லே-அவுட், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதோடு, தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியே எங்கும் செல்லாத அளவிற்கு தடுப்புகள் அமைத்து போலீசார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தீவிர தடுப்பு நடவடிக்கை

மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதத்திற்கு மேலானோர் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் நகரில் மேலும் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கிராமப்புற மக்கள், விழுப்புரம் நகருக்குள் வருவதை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து கிராமங்களுக்கும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்கனவே நடமாடும் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிற நிலையில் தற்போது மக்களின் தேவைக்கேற்ப கூடுதலாக அத்தியாவசிய பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கட்டுப்பாடு

அதுமட்டுமின்றி விழுப்புரம் நகர எல்லைப்பகுதிகளான கோலியனூர் கூட்டுசாலை, முத்தாம்பாளையம், மாம்பழப்பட்டு சாலை, ஜானகிபுரம் புறவழிச்சாலை, விழுப் புரம்-செஞ்சி புறவழிச்சாலை ஆகிய இடங்களில் போலீசார், பேரிகார்டு மற்றும் மரக்கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைத்து அத்தியாவசிய பணியை தவிர பிற தேவைகளுக்காக வரும் கிராமப்புற மக்களை நகருக்குள் செல்லாதவாறு தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனையும் மீறி நகருக்குள் வர பிரதான சாலைகளில் வராமல் தெருக்கள் வழியாக பொதுமக்கள் புகுந்து வரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு அவ்வாறு வருபவர்களையும் தடுத்து நிறுத்த வசதியாக 40-க்கும் மேற்பட்ட தெருக்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கிராமப்புற மக்களை நகருக்குள் வராதபடி திருப்பி அனுப்பி வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைகளால் கடந்த சில நாட்களாக விழுப்புரம் நகரத்தில் ஓரளவு மக்கள் கூட்டம் குறைந்துள்ளது.

நகரம் தனிமைப்படுத்தப்பட்டது

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கூறுகையில், கொரோனா பாதிப்பு எதிரொலியாக விழுப்புரம் நகரம் முழுவதும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து நகருக்கு வருபவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்த பின்பே உள்ளே வர அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விழுப்புரம் நகரம் முழுவதும் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும் என்றும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


Next Story