கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், செவிலியர்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பு: அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், செவிலியர்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பு: அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்
x
தினத்தந்தி 2 May 2020 11:30 PM GMT (Updated: 2 May 2020 9:21 PM GMT)

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், செவிலியர்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பினை, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.

நாமக்கல், 

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, காவல்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும். அதன் அடிப்படையில் நாமக்கல் ஆயுதப்படை போலீசார் 294 பேருக்கும், பெரியப்பட்டி காவலர்கள் குடியிருப்பில் வசித்து வரும் 290 போலீசாரின் குடும்பத்தினருக்கும், மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 74 தீயணைப்புத்துறை வீரர்களுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் 368 பேருக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் கீழ் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் 1,490 செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொருட்கள் தொகுப்பை வழங்கினர். இதில் கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.

முன்னதாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் செலிவியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், மாணிக்கம்பாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலிவியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் தொகுப்பினை அமைச்சர்கள் வழங்கினர். இதில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் உள்பட காவல்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story