கொரோனாவில் இருந்து குணமடைந்த பெண் தங்குவதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


கொரோனாவில் இருந்து குணமடைந்த பெண் தங்குவதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 May 2020 5:03 AM IST (Updated: 3 May 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னமனூர்,

தேனி மாவட்டத்தில் மொத்தம் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்களில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் இறந்தார். மற்ற 42 பேரும் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இதில் போடியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவரும் அடங்குவார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அந்த பெண், சின்னமனூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். இதுகுறித்து நேற்று தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண் தங்கள் பகுதியில் வசிக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் முழுமையாக குணமடைந்த பின்னரே மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் 14 நாட்களுக்கு வீட்டில் ஒரு அறையில் தனிமையில் வைக்கப்படுவார். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அந்த பெண் தங்கியுள்ள வீட்டுக்கு யாரும் செல்லாத வகையில் தடுப்பு வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. 

Next Story