ஊரடங்கு அமலில் இருந்தும் வேகமாக பரவுகிறது விழுப்புரத்தில் ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா


ஊரடங்கு அமலில் இருந்தும் வேகமாக பரவுகிறது விழுப்புரத்தில் ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 May 2020 3:52 AM IST (Updated: 4 May 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு அமலில் இருந்தும் வேகமாக பரவுவதால் விழுப்புரத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூரில் 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

விழுப்புரம்,

அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.

கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள்

நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்கனவே 2,757 பேர் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில், நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் நேற்று முன்தினம் வரை 53 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 2 பேர் பலியாகினர். 29 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மற்ற 22 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம் கம்பியாம்புலியூர், திண்டிவனம், செஞ்சி, அரசூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

33 பேருக்கு பாதிப்பு

இவர்களில் 47 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் நேற்று கிடைக்கப்பெற்றன. இதில் 6 பெண்கள், 27 ஆண்கள் என மொத்தம் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 14 பேருக்கு நோய் தொற்று இல்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட 33 பேரும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு நோய் தொற்று இருக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரத்தில் இருந்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

‘சீல்’ வைப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 33 பேரும் விக்கிரவாண்டி தாலுகா ஆவுடையார்பட்டு, கயத்தூர், பூண்டி, தும்பூர், குத்தாம்பூண்டி, கஸ்பாகாரணை, அசோகபுரி மற்றும் விழுப்புரம் தாலுகா பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம் ஆகிய 11 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த கிராமங்களை தடை செய்யப்பட்ட கிராமங்களாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அந்த கிராமங்களில் இருக்கும் மக்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருக்கும் வகையிலும், அதுபோல் வெளிநபர்கள் யாரும் அக்கிராமங்களுக்குள் நுழையாமல் இருக்கும் வகையிலும் 11 கிராமங்களின் பிரதான சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அந்த கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள 13 எல்லைப்பகுதிகள் மீண்டும் ‘சீல்’ வைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 3,399 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 86 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,152 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இன்னும் 161 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வரவில்லை.

மேலும் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 43 பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 36 பேரும், விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் 27 பேரும் என மொத்தம் 106 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மாவட்டம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,132 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றனர்.

கடலூர் மாவட்டம்

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 37 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து விட்டு கடலூர் மாவட்டத்திற்கு வந்த சிலர் கடலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. இதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நெல்லிக்குப்பம் அருகே உள்ள சி.என்.பாளையம், சிறுகிராமம், புதுகுப்பம் மற்றும் பட்டீஸ்வரம் பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

விருத்தாசலம்

இதேபோல் விருத்தாசலத்தில் உள்ள ஒரு கல்லூரி மற்றும் விடுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களின் சிலரது பரிசோதனை முடிவும் நேற்று வந்தது. இதில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் படுகளாநத்தத்தை சேர்ந்த 4 பேர், முகுந்தநல்லூர் மற்றும் ஆலடியை சேர்ந்த தலா ஒருவர், வேப்பூர் அடுத்த அரியநாச்சியை சேர்ந்த ஒருவர் ஆவர்.

இது தவிர பண்ருட்டி பகுதியை சேர்ந்த மூதாட்டி மற்றும் அவரது மகன், மருமகளுக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த 20 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்து கடலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இதில் மூதாட்டியின் பேத்தியான 11 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 16 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்ட எல்லைகளில் தடுப்பு கட்டை மற்றும் பேரிகார்டு மூலம் தடுப்பு ஏற்படுத்தி, ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Next Story