வருமானம் இன்றி தவிப்பு: உணவுக்காக குளத்தில் மீன் பிடிக்கும் கிராமத்தினர்
மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் குளத்தில் மீன் பிடித்து அதனை அப்பகுதி மக்கள் சமைத்து உண்டு வருகின்றனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்து வருபவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கியுள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமல் போனது. 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உள்ளதால் இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவுக்கு மிகவும் சிரமப்படும் நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இப்பகுதி மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீடுகளில் அசைவ உணவு சமைப்பதற்காக அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து கிராம மக்கள் தங்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து குளத்திற்குள் இறங்கி வலைகள் மற்றும் வேட்டி, சேலைகளை வைத்து மீன் பிடிக்க தொடங்கினர்.
இதில் கெண்டை, கெழுத்தி, கட்லா, தேன் கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டன. ஒவ்வொருவரும் சுமார் 2 கிலோ முதல் 5 கிலோ வரை மீன்களை பிடித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வருமானம் இல்லாததால் உணவின்றி தவித்து வருகிறோம். மேலும் இப்பகுதிக்கு அரசு சார்பில் காய்கறி வினியோகம் செய்யும் வாகனங்களும் வரவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் குளத்தில் மீன் பிடிக்க முடிவு செய்து அதனை சமைத்து உண்டு வருகிறோம். எனவே வருமானமின்றி தவிக்கும் எங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story