விலை கடும் வீழ்ச்சி நாட்டு வாழைத்தார் ரூ.100-க்கு விற்பனை


விலை கடும் வீழ்ச்சி நாட்டு வாழைத்தார் ரூ.100-க்கு விற்பனை
x
தினத்தந்தி 5 May 2020 5:33 AM IST (Updated: 5 May 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. நாட்டு வாழைத்தார் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பஸ், வேன், கார், லாரிகள் போக்குவரத்து முடங்கி உள்ளது.

விவசாயம், மீன்பிடி தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அரசு ஒவ்வொரு தொழிலாக விலக்கு அளித்து வருகிறது. அதன்படி, விவசாய தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வழக்கம்போல் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், விவசாயிகள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

விலை வீழ்ச்சி

குறிப்பாக வாழை பயிரிட்டு உள்ள விவசாயிகள் வாழைத்தார்களை வெளிமாவட்ட மார்க்கெட்டுகளுக்கு அனுப்ப முடியாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். உள்ளூரிலும் அனைத்து வாழைத்தார்களையும் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் மார்க்கெட்டில் தினந்தோறும் குவியும் வாழைத்தார்கள் தேங்கி கிடக்கின்றன. பெரும்பாலான ரகங்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. செவ்வாழை, பூலான்செண்டு, ஏத்தம் பழங்கள் மட்டும் சற்று ஆறுதல் தரும் வகையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை விவரம்

புதுச்சேரி மார்க்கெட்டில் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டு வாழைத்தார் நேற்று ரூ.100 முதல் ரூ.150 வரையும், கதலி ரூ.70-க்கும், சக்கை ரூ.100-க்கும், மட்டி ரூ.200 முதல் ரூ.250 வரையும், பச்சை வாழை ரூ.100 முதல் ரூ.150 வரையும், செவ்வாழை ரூ.300 முதல் ரூ.500 வரையும், கற்பூரவள்ளி ரூ.150 முதல் ரூ.200 வரையும், மலையேத்தம் பழம் ரூ.250 முதல் ரூ.300 வரையும், ரஸ்தாலி ரூ.200 முதல் ரூ.250 வரையும், பூலான்செண்டு ரூ.300 முதல் ரூ.400 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

15 டன்

இதுகுறித்து வாழைத்தார் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால், வாழைப்பழங்கள் விற்பனை குறைந்து உள்ளது. முன்பு மார்க்கெட்டுக்கு தினமும் சுமார் 7 டன் வாழைத்தார்கள் வந்தன. தற்போது விற்பனை செய்ய முடியாததால் வாழைத்தார்களை வெட்டுவதை சில காலம் தள்ளிப்போடுமாறு அறிவுறுத்தி உள்ளோம். ஆனாலும், தினம்தோறும் சுமார் 4 டன் வரை வாழைத்தார்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

தற்போது கோவில் விழாக் கள் அனைத்தும் முடங்கி இருப்பதால் நாட்டு வாழைப்பழங்கள் வாங்குவது முற்றிலும் குறைந்து உள்ளது. இதன் காரணமாக நாடு, சக்கை வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story