கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு: புதுவை எல்லைகளை மூட உத்தரவு


கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு: புதுவை எல்லைகளை மூட உத்தரவு
x
தினத்தந்தி 5 May 2020 12:40 AM GMT (Updated: 5 May 2020 12:40 AM GMT)

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் புதுச்சேரி எல்லையில் போலீசார் கடும் கெடுபிடி காட்டினர். இதனால் வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டன. புதுச்சேரி எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

போலீஸ் டி.ஜி.பி. ஆய்வு

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா நோய்க் கிருமி பரவுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. நோய்த்தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடலூரில் புதியதாக 108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி, போலீஸ் டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், கலெக்டர் அருண் ஆகியோர் நேற்று புதுச்சேரி எல்லை பகுதியான முள்ளோடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவஸ்தவா, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். போலீசாரும், மருத்துவ குழுவினரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும், கெடுபிடிகளை கடுமையாக்க வேண்டும், ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும், ஆம்புலன்சில் வரும் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே இருக்கவேண்டும், புதுச்சேரியில் தொற்று பரவாமல் இருக்க அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் தான் சாத்தியமாகும் என்றார். இதையடுத்து எல்லையை மூடும் வகையில் சாலைகள் முழுவதும் தடுப்புகளால் அடைக்கப்பட்டது.கடலூர், விழுப்புரத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

இதனிடையே, கடலூரில் இருந்து வரும் வாகனங்களை முள்ளோடை எல்லையில் திருப்பி அனுப்புவதாக கிடைத்த தகவலின் பேரில், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் முள்ளோடைக்கு வந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரித்தனர்.

அப்போது, கடலூர், புதுச்சேரி மாவட்ட கலெக்டர்களின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே, ஊழியர்கள் உள்பட யாராக இருந்தாலும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் கடலூர் பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர்.

வாக்குவாதம்

இதைபோல் புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டது. ஊரடங்கு தளர்வு என அறிவித்தும் வாகனத்தை அனுமதிக்கவில்லையே என கேட்டு போலீசாரிடம் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story