குடியாத்தம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம் குடிநீர் வழங்க கோரிக்கை


குடியாத்தம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம் குடிநீர் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 6 May 2020 5:23 AM GMT (Updated: 6 May 2020 5:23 AM GMT)

குடியாத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த தனகொண்டப்பள்ளி ஊராட்சியில் குடிநீர் தேவைக்காக 6 ஆழ்துளை கிணறுகள் செயல்பட்டு வந்தன. அதில் தற்போது 4 ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்துள்ளன. அந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் உள்ளது. எனினும், மின்மோட்டார் மற்றும் குழாய்கள் பழுதானதால் தனகொண்டப்பள்ளி காலனி பகுதிக்கு பல நாட்களாகக் குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

தனகொண்டப்பள்ளி காலனி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பல நாட்களாக இப்பகுதியில் தண்ணீர் வினியோகம் இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தே சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். ஒருமுறை தண்ணீர் பிடிக்க, ஒரு குடத்தை எடுத்துச் சென்றால் 4 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் அவலநிலை உள்ளது. தண்ணீர் வசதி இருந்தும் ஆழ்துளை கிணறுகள் பழுதுப் பார்க்காததால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

விரைவில் நடவடிக்கை

உடனடியாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கிராமத்தில் காலிக்குடங்களுடன் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் தொடர்பு கொண்ட அதிகாரிகள், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் மற்றும் வருவாய்த்துறையினர் தனகொண்டப்பள்ளி கிராமத்துக்கு விரைந்து வந்து பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை சீர் செய்யும் பணியில் பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். விரைவில் தனகொண்டப்பள்ளி காலனி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என உறுதி அளித்தனர்.


Next Story