விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 155 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 155 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது
x
தினத்தந்தி 7 May 2020 7:35 AM IST (Updated: 7 May 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 155 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி குடோனில் இருந்து மதுபான வகைகள் லாரிகள் மூலம் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விழுப்புரம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையொட்டி தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி மாலை 6 மணி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்த ஊரடங்கை பயன்படுத்தி பல இடங்களில் பூட்டிக்கிடக்கும் டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்தது. இதனை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் இருக்கும் மதுபான வகைகள் அனைத்தும் லாரிகள் மூலம் டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு

அந்த வகையில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தமுள்ள 226 டாஸ்மாக் கடைகளில் இருந்தும் மதுபான வகைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு விழுப்புரம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் உள்ள டாஸ்மாக் குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதுதவிர ஒரு சில திருமண மண்டபங்களிலும் மதுபான வகைகள் வைக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கினால் 1½ மாதமாக மதுபானம் கிடைக்காமல் தவித்து வந்த மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக டாஸ்மாக் கடைகள் மே 7-ந் தேதியன்று திறக்கப்படும் என்றும், இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இருக்கும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று அரசு அறிவித்தது.

இதையொட்டி விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை தவிர்த்து மற்ற இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான ஆயத்த பணிகளில் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

155 கடைகள்

அதன்படி விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி பகுதிகள் மற்றும் அரகண்டநல்லூர், விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை தவிர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் 85 கடைகளையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 70 கடைகளையும் ஆக மொத்தம் 155 கடைகளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த 155 கடைகளும் இன்று (வியாழக்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. இதையொட்டி டாஸ்மாக் குடோன் மற்றும் திருமண மண்டபங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மதுபான வகைகளை நேற்று லாரிகளில் ஏற்றி அந்தந்த டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை வாங்க வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தங்களது அடையாள அட்டையில் ஏதேனும் ஒரு அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், முக கவசம் அணிந்து வருபவர்களுக்கே மதுபானம் வழங்கப்படும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆயத்த ஏற்பாடு

அதுமட்டுமின்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானம் வாங்கிச்செல்ல ஏதுவாக மரக்கட்டைகள் மூலமும், பேரிகார்டுகள் மூலமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அந்த தடுப்புகளுக்குள் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக வெள்ளை நிறத்தில் அடையாள குறியீடுகளும் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மதுபானம் வாங்க வரும் மதுப்பிரியர்கள் நன்கு கைகளை கழுவிய பிறகே மதுபானம் வாங்குவதற்கும், இதற்காக அனைத்து கடைகளின் வளாகத்திலும் தற்காலிகமாக தண்ணீர் தொட்டியும், சோப்பும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடிய மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு முக கவசம், கையுறை, கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டு அதை பயன்படுத்தி மது விற்பனையில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எது எப்படியோ, 1½ மாதங்களுக்கு பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் மதுப்பிரியர்கள் அனைவரும் மிகவும் குஷியடைந்துள்ளனர்.

Next Story