திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 9 தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வு


திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 9 தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 May 2020 2:57 AM GMT (Updated: 7 May 2020 2:57 AM GMT)

கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து திரும்பிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 9 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு 107 ஆக உயர்ந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுடெல்லி மற்றும் பிற மாநிலங்கள், சென்னை போன்ற வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 98 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அதில் மூதாட்டி, சிறுவர்கள், பெண்கள் உள்பட 79 பேர் குணமடைந்து தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். மேலும் 18 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து தினமும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின.

கோயம்பேடு தொழிலாளர்கள்

இதில் நிலக்கோட்டை தெப்பத்துப்பட்டி, சேவுகம்பட்டி, வத்தலக்குண்டு பூசாரிபட்டி, எழுவனம்பட்டி, சிங்காரக்கோட்டை, எம்.வாடிப்பட்டி, சாணார்பட்டியை அடுத்த வேம்பார்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த 8 பேரும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அந்த 8 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்ட நபர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் தனிவார்டு தயாராகி விட்டதால், நேற்று தொற்று கண்டறியப்பட்ட 8 பேரும் அங்கு சேர்க்கப்பட்டனர்.

கொடைக்கானல் வாலிபர்

இதற்கிடையே கொடைக்கானலை சேர்ந்த ஒரு வாலிபர், கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு காய்கறி கடையில் வேலை செய்துள்ளார். அங்கிருந்து ஊருக்கு வருவதற்காக சரக்கு வாகனங்களில் மாறி, மாறி பயணித்துள்ளார். அதில் அவர் தூங்கி விட்டதால் மதுரையில் இறங்கினார். அங்கு அவரை போலீசார் பிடித்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதேநேரம் நேற்று அந்த வாலிபர் மருத்துவமனையில் இருந்து தப்பிவிட்டார். மேலும் அவர் சொந்த ஊருக்கு செல்லலாம் என்பதால், திண்டுக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தியதில், வத்தலக்குண்டு அருகே காட்டுரோடு பகுதியில் அவர் சிக்கினார். மதுரையில் இருந்து அவர் நடந்தே வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மொத்தம் 107 பேர்

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. திண்டுக்கல், கரூரில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 24 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story