ஆரணி, படவேடு பகுதியில் செவிலியர் உள்பட 3 பேருக்கு கொரோனா


ஆரணி, படவேடு பகுதியில் செவிலியர் உள்பட 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 May 2020 5:00 AM IST (Updated: 10 May 2020 3:25 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி, படவேடு பகுதியில் செவிலியர், கால்டாக்சி டிரைவர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, பள்ளிகூடத் தெருவை சேர்ந்தவர் 108 ஆம்புலன்ஸ் உதவியாளர். இவரது மனைவி ஆரணி திருவள்ளுவர் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வசிக்கும் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி 55 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சில தினங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து செவிலியர் தனது குடும்பத்தினருடன் ஆரணிப்பாளையம், தர்மராஜா கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கியிருந்தனர். இந்த நிலையில், நேற்று காலை செவிலியருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா தலைமையில் மருத்துவக் குழுவினர் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் செவிலியர்கள் மற்றும் களப் பணியாளர்களை கொண்டு அப்பகுதியில் உள்ளவர்களிடம் காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என கேட்டறிந்தனர். அப்பகுதி வழியாக செல்லக்கூடிய பாதைகளை தடுப்புகள் வைத்து தடுத்தனர்.

ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் தலைமையில் களப்பணியாளர்களை கொண்டு அப்பகுதியில் உள்ள 20 தெருக்களிலும் கிருமி நாசினி, சுண்ணாம்பு நீர் தெளிக்கப்பட்டது.

ஆரணியை அடுத்த சேவூர் அருகர் கோவில் தெருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் டீக்கடை நடத்திவந்த அவருடைய தந்தைக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா மற்றும் மருத்துவக்குழுவினர் சென்று அவரை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அக்கிராமத்தில் கிருமி நாசினி, பிளச்சிங் பவுடர், சுண்ணாம்பு நீர் தெளிக்கும் பணிகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் யார் யாருடன் பழகினார், அவருடைய டீக்கடைக்கு யார் யார் வந்து சென்றனர் போன்ற விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

படவேடு கேசவபுரம் கிராமத்தை சேர்ந்த 32 வயது வாலிபர் சென்னை கோயம்பேடு பகுதியில் கால் டாக்சி டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி தனது மனைவி, மகளுடன் சொந்த ஊர் திரும்பினார். உடனடியாக 3 பேரையும் சுகாதாரத் துறையினர் படவேடு ரேணுகொண்டாபுரம் பள்ளியில் தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்தனர். இதில் டிரைவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது மனைவி, மகள், உறவினர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அவரது வீடு உள்ள கேசவபுரம் பகுதியில் படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர், சுகாதார ஆய்வாளர் பரந்தாமன் உள்பட மருத்துவக்குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் தடுப்பு நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி, குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டது.

போளூர் தாசில்தார் ஜெயவேலு, வருவாய் ஆய்வாளர் கணபதி ஆகியோர் கேசவபுரம் கிராமத்திற்கு நேரில் வந்து சுகாதார நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்தவர்களை வெளியூர் செல்வதற்கு முன், அங்கேயே அவர்களை தனிமைப்படுத்தி கொண்டு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருந்தால் கிராமங்களுக்கு தொற்று வந்திருக்காதே? என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

Next Story