கிருஷ்ணகிரிக்கு கொரோனா வந்துள்ளதாக கூறி கடைகளை பூட்ட சொல்லி வியாபாரிகளை மிரட்டிய போலீசார்


கிருஷ்ணகிரிக்கு கொரோனா வந்துள்ளதாக கூறி கடைகளை பூட்ட சொல்லி வியாபாரிகளை மிரட்டிய போலீசார்
x
தினத்தந்தி 10 May 2020 9:28 AM IST (Updated: 10 May 2020 9:28 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரிக்கு கொரோனா வந்துள்ளதாக கூறி, கடைகளை பூட்ட சொல்லி வியாபாரிகளை போலீசார் மிரட்டுவதாக புகார் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி கடைகள், வீட்டு உபயோகபொருட்கள் விற்பனை கடைகள், இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து, வியாபாரம் செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரியில் கடந்த 4-ந் தேதி கடைகள் திறக்கப்பட்டன. ஒரே நேரத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தடுக்க வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று உதவி கலெக்டர் தெய்வநாயகி கேட்டு கொண்டார்.

இதையடுத்து மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட முக்கிய கடைகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இயங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது போக்குவரத்து பிரிவு போலீசார் உள்பட 10 போலீசார் அனைத்து கடைகளையும் உடனடியாக மூடுங்கள் என்று கூறினார்கள். அப்போது கடைக்காரர்கள் மதியம் வரை திறக்கலாம் என்று கூறி உள்ளார்களே என்றனர்.

வியாபாரிகள் அதிர்ச்சி

அதற்கு போலீசார் கிருஷ்ணகிரியில் பழையபேட்டை, ராயக்கோட்டை சாலைக்கெல்லாம் கொரோனா வந்து விட்டது. எனவே கடைகளை பூட்டுங்கள் என்று கூறினார்கள். மேலும் கே. தியேட்டர் சாலையில் பார்சல் உணவு வழங்கிய டிபன் கடைகளையும் உடனடியாக மூடுமாறு மிரட்டினார்கள். இதனால் வியாபாரிகள் செய்வதறியாமல் அதிர்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி நகரில் தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் காலை நேரத்தில் விற்பனை செய்யவும் போலீசார் கெடுபிடி காட்டுவதாக புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக சேலம் ரோடு, சப்-ஜெயில் சாலைகள், பெங்களூரு ரோடு, காந்தி சாலை பகுதிகளில் நேற்று காலை 10 மணி அளவில் அதிக அளவில் கடைகள் மூடப்பட்டன. 

Next Story