காரைக்கால் மாவட்டத்தில் முதல் பாதிப்பு பஸ் உரிமையாளருக்கு கொரோனா தொற்று குடியிருப்பு பகுதி முழுவதும் சீல் வைப்பு


காரைக்கால் மாவட்டத்தில் முதல் பாதிப்பு பஸ் உரிமையாளருக்கு கொரோனா தொற்று குடியிருப்பு பகுதி முழுவதும் சீல் வைப்பு
x
தினத்தந்தி 11 May 2020 4:45 AM IST (Updated: 11 May 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மாவட்டத்தில் முதன் முதலாக திருநள்ளாறை சேர்ந்த பஸ் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையொட்டி அவர் வசித்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது.

காரைக்கால்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக பச்சை மண்டலத்தில் இடம் பிடித்து இருந்தது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு சுரக்குடியைச் சேர்ந்த 37 வயது நபர், சொந்தமாக பஸ் வாங்கி, டிரைவராக ஓட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உள்ள தமிழக பகுதிக்கு இவர் சென்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

இது தொடர்பான புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறையில் அடைப்பதற்கு முன் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதிப்பதற்காக உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று காலை பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக காரைக் கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதிக்கு சீல்

இதற்கிடையில் அவர் வசிக்கும் பகுதி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மூடி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட நலவழித் துறையினர் போலீசார் உதவியோடு சுரக்குடி பகுதிக்குச் சென்று, கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்புடைய சுமார் 8 பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் திருநள்ளாறு போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா மற்றும் அரசு அதிகாரிகள் சுரக்குடி கிராமத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். அங்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் அர்ஜூன் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

அத்தியாவசிய பொருட்கள்

திருநள்ளாறு சுரக்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் வசித்த பகுதி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அங்கு வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காரைக்கால் மாவட்டம் இதுவரை கொரோனா தொற்று இல்லாத பகுதியாக இருந்து வந்தது. எனவே, மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது உள்ளிட்ட நடைமுறைகளை தொடர்ந்து கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story