கொரோனா தொற்று இல்லாத மாவட்டமானது நாமக்கல் ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 15 பேர் ‘டிஸ்சார்ஜ்’


கொரோனா தொற்று இல்லாத மாவட்டமானது நாமக்கல் ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 15 பேர் ‘டிஸ்சார்ஜ்’
x
தினத்தந்தி 14 May 2020 10:31 AM IST (Updated: 14 May 2020 10:31 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உள்பட 15 பேர் நேற்று ஒரே நாளில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறி உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 77 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 62 பேர் ஏற்கனவே குணமாகி வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 3 பெண்கள் உள்பட 15 பேரும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இவர்கள் அனைவரும் குணமாகி வீடு திரும்பினர். இவர்களை மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் கபசுர குடிநீர் பவுடர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் வீடுகளில் கொண்டு போய் விடப்பட்டனர்.

பின்னர் கலெக்டர் மெகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

15 பேர் ‘டிஸ்சார்ஜ்’

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 5,600 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 77 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இவர்களில் 62 பேர் ஏற்கனவே குணமாகி வீடு திரும்பிவிட்டனர். தற்போது மீதமுள்ள 15 பேரும் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். எனவே நமது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவில்லை என்ற நிலையை எட்டி உள்ளோம். அனைவரும் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறி விட்டது.

நமது மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து 50 சதவீத பணியாளர்களுடன் விசைத்தறி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு நகர்புறங்களில் உள்ள விசைத்தறிகளும் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வந்து உள்ளது.

ஆரஞ்சு மண்டலம்

இந்த கோரிக்கை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. ஓரிரு நாட்களில் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம். நாமக்கல் மாவட்டத்தில் தொடக்கத்தில் தினசரி 200 முதல் 300 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்தோம். தற்போது வயதானவர்கள், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது குணமாகி வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். நாமக்கல் மாவட்டம் இதுவரை சிவப்பு மண்டலத்திலேயே நீடிக்கிறது. இன்னும் 14 நாட்கள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை எனில் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மருத்துவ கல்லூரி டீன் சாந்தா அருள்மொழி, ஆஸ்பத்திரி சூப்பிரண்டு ஜெயந்தி, உள்ளுரை மருத்துவ அலுவலர் கண்ணப்பன் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் உடன் இருந்தனர்.


Next Story