ஈரோட்டில் அ.தி.மு.க. சார்பில் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்


ஈரோட்டில் அ.தி.மு.க. சார்பில் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 May 2020 11:00 PM GMT (Updated: 14 May 2020 7:59 PM GMT)

ஈரோட்டில் அ.தி.மு.க. சார்பில் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வினியோகிக்கும் பணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

ஈரோடு, 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் உணவின்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உதவி செய்து வருகிறார்கள். அதன்படி அ.தி.மு.க. சார்பில் ஈரோட்டில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள 70 ஆயிரம் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தொடக்க விழா ஈரோடு நாராயணவலசு பகுதியில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக அரிசியை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் ஏழை குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீஷ், கோவிந்தராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரகுமார், பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், மாவட்ட மாணவர் அணி இணைச்செயலாளர் நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story