திருப்பூரில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு கன்டெய்னர் லாரியில் தப்பிச்செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூரில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு கன்டெய்னர் லாரியில் தப்பி செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள் விஜயமங்கலம் சோதனை சாவடியில் சிக்கினார்கள்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கள்ளியம்புதூர் சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 9 மணிஅளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்த போலீசார், வாகனங்கள் எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது, எந்த சரக்கு பாரம் ஏற்றப்பட்டு உள்ளது போன்ற விவரங்களை சேகரித்து அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் ஒரு கன்டெய்னர் லாரி அந்த வழியாக வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது லாரியின் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கன்டெய்னரை திறக்க வேண்டும் என்று டிரைவருக்கு உத்தரவிட்டனர்.
லாரியின் பின்பக்கமாக சென்ற டிரைவர் கன்டெய்னரை திறந்தார். அப்போது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கூட்டமாக கன்டெய்னருக்குள் இருந்ததை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து லாரியின் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நாசிர்அலி (வயது 28) என்பதும், திருப்பூரில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 81 பேரை ஏற்றிக்கொண்டு அந்த மாநிலத்தில் உள்ள மொரதாபாத்துக்கு செல்ல முயன்றதும் தெரியவந்தது.
திருப்பூரில் தங்கியிருந்து வேலை செய்து வந்த அந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானமின்றி தவித்து வந்ததால், தங்களது சொந்த ஊருக்கு கன்டெய்னர் லாரியில் தப்பி செல்ல திட்டமிட்டதும், இதற்காக லாரியின் டிரைவரிடம் வாடகைக்கு பேசி சென்றதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து லாரியின் டிரைவர் நாசிர் அலியை கைது செய்தார். மேலும், கன்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் தப்பி செல்ல முயன்ற 81 தொழிலாளர்களையும் பெருந்துறை போலீசார் திருப்பூருக்கு திருப்பி அனுப்பி வைத் தனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் கன்டெய்னர் லாரியில் தப்பி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story