கடலூர் மாவட்டத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


கடலூர் மாவட்டத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 16 May 2020 3:20 AM IST (Updated: 16 May 2020 3:20 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 413 பேர் கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை தவிர கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நோய் அறிகுறி காணப்பட்டவர்கள் என 3 ஆயிரத்து 230 பேர் பள்ளி கல்லூரி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 பேர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 34 பேர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 28 பேர் என மொத்தம் 146 பேர் மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட 169 பேர் என மொத்தம் 315 பேர் வழியனுப்பி வைக்கப் பட்டனர்.

முழு ஒத்துழைப்பு

அந்த வகையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கலந்துகொண்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 84 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை மற்றும் காய்கறி ஆகிய நிவாரண உதவிகளை வழங்கி வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தார். முன்னதாக கலெக்டர் அன்புசெல்வன் பேசியபோது கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முகக் கவசங்கள் அணியவேண்டும். மேலும் இன்னும் சில நாட்களில் கடலூர் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும். பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் குமார் மற்றும் டாக்டர்கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story