சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் ‘டிஸ்சார்ஜ்’: கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது சேலம்


சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் ‘டிஸ்சார்ஜ்’: கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது சேலம்
x
தினத்தந்தி 16 May 2020 9:51 AM IST (Updated: 16 May 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டதால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சேலம் மாறியது.

சேலம்,

சேலத்தில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த முஸ்லிம் மத போதகர்கள் 4 பேர், டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பியவர்கள், கர்ப்பிணிகள் என 35 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சை பெற்றனர். இவர்களில் நேற்று முன்தினம் வரை 33 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் ஓமலூரை சேர்ந்த ஒருவர், கெங்கவல்லி பகுதியை சேர்ந்த ஒருவர் என 2 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டு வழியனுப்பும் நிகழ்ச்சி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ராமன், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன், மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முக கவசம்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை, அனைவரும் கைத்தட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக அவர்களிடம், வீட்டுக்கு சென்றதும் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறும், கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளி விட்டு இருக்குமாறும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த 35 பேரும் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். இதுகுறித்து கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் முதன் முதலில் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 4 முஸ்லிம் மதபோதகர்கள் உள்பட 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த வைரசுக்கு 35 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு 52 நாட்களுக்கும் மேலாக மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்ததின் பேரில் அவர்கள் அனைவரும் குணமாகி ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

தொற்று இல்லாத மாவட்டம்

தற்போது யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. இதனால் கொரோனோ தொற்று இல்லாத மாவட்டமாக சேலம் மாறியது. இந்த நிலையை எட்டியதற்கு சிறப்பான பணியில் ஈடுபட்ட மருத்துவ குழுவினர் முற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். டிரைவர்கள் யாராவது சேலம் மாவட்டத்திற்கு வந்தால் அவர்களை சோதனை சாவடிகளில் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து யாரேனும் வந்தால் அவர்களையும் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம். இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. குறிப்பாக மராட்டியம், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களை ஒரு வாரம் கருப்பூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து வருபவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதுடன் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளோம்.

விதிமுறைகள் தளர்த்தப்படும்

இதுதவிர சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இன்னும் ஓரிரு நாட்களில் விதிமுறைகள் தளர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story